ஈரல் அழற்சி C என்பது ஈரல் அழற்சி A மற்றும் B ஆகியவற்றில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

ஈரல் அழற்சி A மற்றும் B கிருமிகளுக்கு எதிராகத் தடுப்பு மருந்து இருக்கிறது. ஆனால் ஈரல் அழற்சி C வகைக் கிருமிகளுக்கு எதிராகத் தடுப்பு மருந்து இல்லை.

ஈரல் அழற்சி A கிருமித் தொற்று மனித மலத்தினால் அசுத்தமடைந்த நீர், குடிபானங்கள் அல்லது உணவு ஆகியவற்றை உட்கொள்ளுவதன் மூலம் ஏற்படுகிறது. ஈரல் அழற்சி A கிருமித் தொற்றுக்குச் சிகிச்சை எதுவும் இல்லை என்றபோதிலும் இத்தொற்று வழமையாகத் தானாகவே குணமாகி விடுவதுடன் இந்த வைரசுக்கு எதிராக உடலில் நோயெதிர்ப்புச் சக்தியும் ஏற்பட்டு விடுகிறது .

ஈரல் அழற்சி  B வைரசுக் கிருமியைக் கொண்டிருக்கும் ஒருவரின் இரத்தம், விந்து அல்லது யோனித் திரவம் இன்னுமொருவரின் இரத்தத்துடன் கலக்கும் பொழுது ஈரல் அழற்சி B பரவுகிறது. உதாரணமாக,  இக்கிருமிகள்பாதுகாப்பு இல்லாத விதத்தில் உடலுறவு கொள்ளும்பொழுது கடத்தப்படுகின்றன, அல்லது பிள்ளைப்பேற்றின் பொழுது தாயிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படுகின்றன. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இலகுவாகப் பரவும் ஒரு நோயாகவும் மனிதர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒன்றாகவும் உள்ளது. ஈரல் அழற்சி B கிருமியினால் பீடிக்கப்படும் பெரும்பாலானவர்களின் உடலில் இருந்து அந்த வைரசுக்கள் தானாகவே அகற்றப்பட்டு விடுவதுடன் அவர்களுக்கு அந்த வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியும் ஏற்பட்டுவிடுகிறது. சிலரில் இது நாட்பாட்த தொற்றாகத் தொடருவதும் உண்டு. இவர்களில் இந்த வைரசின் பெருக்கத்தினைச் சிகிச்சியால் கட்டுப்படுத்த முடியும் என்றபோதிலும் அதனைப் பூரணமாக அகற்றிவிட முடியாது.

ஈரல் அழற்சி A மற்றும்  B நோய்கள் வராமல் பாதுகாக்கும் தடுப்பு மருந்து கனடாவில் பரவலாகக் கிடைக்கக் கூடியதாக உள்ளது. இத் தடுப்பு மருந்தினை எடுப்பது பற்றி உங்கள் வைத்தியர் அல்லது சுகாதார சேவை வழங்குநரிடம் விசாரியுங்கள். ஒன்ராறியோவில் உள்ளவர்களில் பலர் இத் தடுப்பு மருந்தினை இலவசமாகப் பெற முடியும்.