சொற்கோவை

தீவிரமான நிலை: தொற்றின் முதற் பகுதி அல்லது ஆரம்ப நிலை. இது வழமையாக ஆறு மாதங்கள் நீடிக்கும்.

வைரசுக்கு எதிரான மருந்துகள்: வைரசுக்கு எதிரான மருந்துகள், ஒரு வைரசு தன்னைப் போன்ற ஒரு பிரதியை உருவாக்க விடாது தடுக்கும் செயல் மூலம் தொழிற்படுகின்றன. பற்றீரியா வகைக் கிருமிகளைக் கொல்லக்கூடிய ஆனால் வைரசுக்களைக் கொல்லமுடியாதனவாக இருக்கின்ற நுண்ணுயிரெதிரிகள் (antibiotics) போன்ற சாதாரண மருந்துகளில் இருந்து இவை வேறுபட்டனவாக உள்ளன.

அறிகுறி அற்ற நிலை: நோயின் அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் எதுவும் தென்படாத நிலை.

நாட்பாட்த நிலை: நீண்டகாலமாக நிலைத்திருக்கும் அல்லது திரும்பத் திரும்ப ஏற்படும் தொற்று அல்லது நோய்நிலை.

ஈரல் கரணை (Cirrhosis): ஈரல் நோயின் பிந்திய நிலை. ஈரலில் தழும்புவடு ஏற்பட்டு (நாரிழையப் பெருக்கம்) ஈரல் இறுக்கம் அடைதல் இதனை வரையறுக்கின்ற அடையாளமாக அமையும். இதனைத் தொடர்ந்து ஈரல் தனது தொழிற்பாடுகளை இழப்பதுடன் முடிவில் செயலற்றுப் போகும் நிலையும் ஏற்படலாம்.

நோயடையாளம் காணல்: சோதனைகள் அல்லது அறிகுறிகளைக் கொண்டு, குறித்த ஒரு நோயை ஒருவரில் அடையாளம் காணுதல்

நார் இழையப் பெருக்கம் (Fibrosis): ஈரலுக்கு ஏற்படும் சேதத்தின் விளைவாக இழையம் தடிப்புறுதலும் தழும்பு வடு ஏற்படுதலும்

ஏச்ஐவி: மனித நோயெதிர்ப்புச் சக்தி குறைபாட்டு வைரசு (Human Immunodeficiency Virus /HIV) என்பது, நோயின் தாக்குதலுக்கு எதிராக உங்கள் உடலைப் பாதுகாக்கும் உடலுட்புறத் தொகுதியான நோயெதிர்ப்புத் தொகுதியினைப் பலவீனப் படுத்துகிறது. உங்களது நோயெதிர்ப்புத் தொகுதி உங்களைத் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஏச்ஐவி வைரசு கிருமி உடலிற் புகுந்ததும் அது நோயெதிர்ப்புத்தொகுதியிடமிருந்து ஒளிந்து மறைந்து உடலினை உட்புறத்தில் இருந்து தாக்கக்கூடியதாக இருக்கிறது. உங்களுடைய நோயெதிர்ப்புத் தொகுதி போதிய அளவு பலவீனம் அடையுமானால், நீங்கள் வேறு தொற்றுகளின் தாக்கத்தினால் நோய்வாய்ப் படுவீர்கள். இவ் வைரசுக்கு நீங்கள் சிகிச்சை செய்யாது விட்டால் காலப்போக்கில் உங்கள் உயிருக்கு ஆபத்தாக அமையும் ஒரு தொற்றுக்கு ஆளாவீர்கள். இந்த நிலையில் உங்களுக்கு எயிட்ஸ் (Acquired Immune Deficiency Syndrome/AIDS) எனப்படும் நோய் இருப்பதாகக் கூறப்படும்.

நோயெதிர்ப்புச் சக்தியூட்டல் : ஒரு குறித்த நோய்க்கு எதிராக அதனை எதிர்க்கின்ற அல்லது அதிலிருந்து காப்பாற்றக் கூடிய சக்தியை உடலில் ஏற்படுத்துதல். வழமையாக இது தடுப்பு மருந்து (vaccine) ஒன்றின் வழியாக நிறைவேற்றப்படும்.

அழற்சி நிலை: வீக்கம், வெப்பம் என்பவற்றுடன் சில வேளைகளில் வலியும் உடலின் ஒரு பகுதியில் ஏற்படுதல். நோய்க்கு அல்லது நச்சுப் பொருட்களுக்கு அல்லது உடலைக் குணமாக்கும் முயற்சிக்குப் பதில் விளைவாக உடலில் இது ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை: ஈரல் நோயின் விளைவாக தோல் அல்லது கண்களில் ஏற்படக்சுடிய மஞ்சள் நிற மாற்றம்.

கிருமி நீக்கப்பட்டது: நோயினை உண்டாக்கக் கூடிய கிருமிகள் (பற்றீரியா, வைரசுக்கள் அல்லது வேறு பொருள் அல்லது உயிரிகள்) எதுவும் இல்லாத ஒன்று.

கிருமி நீக்கம் செய்தல்:  நோயினை விளைவிக்கக் கூடிய கிருமிகளை அகற்றுகின்ற செயல்முறை.

அறிகுறிகள்: ஒரு நபர் நோயுற்று இருக்கிறார் என்பதைக் காட்டும் உடலில் தோன்றும் அடையாளங்கள்.

தடுப்பு மருந்து: ஒருவரின் நோயெதிர்ப்புத் தொகுதி, குறிப்பிட்ட ஒரு நோய்க்கு எதிராக அவரைப் பாதுகாப்பதற்காக அவரது உடலில் பிறபொருளெதிரிகளை (antibodies) உருவாக்குவதற்கு உதவும் மருந்து.

வைரசு: நோயினை விளைவிக்கக் கூடிய ஒரு வகைக் கிருமி.