கனடாவில் உள்ள குடிவரவாளர்களுக்கு ஈரல் அழற்சி C பற்றிய தகவல் ஏன் முக்கியமாக உள்ளது?

கனடாவில், ஈரல் அழற்சி C நோயாளர்களில் 20% அளவினர் குடிவரவாளர்கள் மத்தியில் உள்ளனர். கனடாவின் பொதுவான குடிசனத் தொகையினரை விட குடிவரவாளர்கள் மத்தியில் ஈரல் அழற்சி C கூடுதலாகக் காணப்படுகிறது. இந்த வைரசு உங்கள் உடலில் இருந்தபோதிலும் அதனை நீங்கள் அறியாதவர்களாக இருக்கலாம், ஏனெனில் :

  • ஈரல் அழற்சி C யின் ஆபத்துக்களை அறிந்தவர்கள் குறைவாகவே உள்ளனர்.  உலகம் முற்றிலும்  40% அளவான ஈரல் அழற்சி C நோயாளர்கள் உருவாகுவதற்கு, அசுத்தம் அடைந்த இரத்தம் ஏற்றுதல் உட்படப் பாதுகாப்பற்ற மருத்துவச் செயல் முறைகள், போதைவஸ்து உபயோகத்தின்போது ஊசிகள் மற்றும் உபகரணங்கள் பரிமாறப்படுதல் ஆகியவை காரணமாக இருக்கின்றன.
  • கனடாவுக்குள் வரும் குடிவரவாளர்கள் எவ்வகையான ஈரல் அழற்சி நோய்ப்  பரிசோதனைக்கும் உள்ளாகும்படி கேட்கப்படுவதில்லை. இங்கு வருகின்ற மக்கள் வழமையாகப் பாலியல் நோய் (சிபிலிஸ்), ஏச்ஐவி மற்றும் காசநோய் ஆகியவற்றுக்குப் பரிசோதிக்கப்படுகின்றனர். ஆனால் ஈரல் அழற்சி A, B அல்லது C ஆகியவற்றுக்காகப் பரிசோதிக்கப்படுவதில்லை.
  • ஈரல் அழற்சி C பெரும்பாலும் அறிகுறிகள் எதனையும் காட்டுவதில்லை. ஈரல் அழற்சி C உடையவர்கள் பெரும்பாலானவர்களில் அதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. ஈரலில் சேதம் அல்லது ஈரல் புற்றுநோய் தோன்றும் வரையில் அவர்கள் தாம் நோயுற்று இருப்பதை அறியாமல் போகலாம்.
  • குடிவரவாளர்கள் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பரிசோதனைகள் ஆகியவற்றைப் பெறுவதில் தடைகள் உள்ளன. புதிய குடிவரவாளர்கள், ஒன்ராறியோவில் தமது ஒன்ராறியோ சுகாதாரக் காப்புறுதித் திட்ட (OHIP) உதவியினைப் பெறுவதற்கு மூன்று மாதங்கள் காத்திருக்கின்றனர். கனடாவில் குடிவரவாளர்கள் சுகாதார பராமரிப்புச் சேவையினைக் குறைவாகவே அணுகுகின்றனர். இச் சேவைகள் மற்றும் தகவலைப் பெறுவதில் அவர்களுக்கு கலாசார மற்றும் மொழிரீதியான தடைகள் பெருமளவில் ஏற்படுகின்றன.
  • கனடாவுக்குப் புதிதாக வருவோருக்கு அவர்கள் தம் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது பெரிதும் கஷ்டமாக இருக்கும். புதிய வாழ்வு ஒன்றினை கட்டியெழுப்பும் முயற்சியின் மத்தியில் ஆரோக்கியத்திலும் மேலாக வேறு பல விடயங்கள் முன்னுரிமை பெற்றுவிடுகின்றன. மன அழுத்தம் ஒருவரில் போதைவஸ்து உபயோகம், உணவு முறை மற்றும் அவரின் பொதுவான ஆரோக்கியம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு குடும்ப வைத்தியரைப் பெற்றுக் கொள்வதற்குப் பல வருடங்கள் ஆகலாம். அவசர நிலைமைகளுக்கு மட்டுமே பலர் சுகாதாரப் பராமரிப்புச் சேவையை நாடுகின்றனர்.

ஆரம்பக் கட்டத்திலேயே சோதனை செய்து நோயினை அடையாளம் காண்பது மேலான ஆரோக்கியத்துக்கும் மன அமைதிக்கும் இட்டுச் செல்லும்.