ஈரல் அழற்சி C நோய்க்கான பரிசோதனையை நான் எப்படிச் செய்யலாம்?

உங்களுக்கு ஈரல் அழற்சி C நோய் இருக்கிறதா என்று அறிவதற்கு ஒரே வழி பரிசோதனை செய்வது மட்டுமே ஆகும்.

உங்களுக்கு ஈரல் அழற்சி C நோய் இருக்கிறதா என்று அறிய இரண்டு பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

முதலாவது சோதனை: ஈரல் அழற்சி பிறபொருளெதிரிப் (antibody) பரிசோதனை

குறிப்பிட்ட வைரசுக் கிருமி உங்கள் உடலினுள் சென்ற பிறகு உங்கள் உடல், இரத்தத்தில் பிறபொருளெதிரிகளை (antibodies) உருவாக்கும். இந்த இரத்தப் பரிசோதனை அந்தப் பிறபொருளெதிரிகள் உங்கள் இரத்தத்தில் உள்ளனவா என்று அறிய உதவும்.

வைரசுக்கிருமி உடலினுள் சென்ற பின்பு பரிசோதனை ஒன்றில் தென்படும் அளவுக்கு போதுமான பிறபொருளெதிரிகளை உடல் உற்பத்தி செய்வதற்கு ஆறு வாரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை செல்லக்கூடும்.

ஒரு நபரின் உடலில் தானாகவே வைரசுக் கிருமிகள் அகற்றப்பட்டாலும் அல்லது சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டாலும், அவரின் இரத்தத்தில் பிறபொருளெதிரிகள் எப்பொழுதும் இருக்கும். பிறபொருளெதிரிகள் ஒரு நபரில் இருப்பதனால் மட்டும் அவர் ஈரல் அழற்சி C யினை இன்னுமொருவருக்குப் பரப்புவார் என்று  அர்த்தம் ஆகாது. எனவே அவரது இரத்தத்தில் வைரசுக் கிருமி இருக்கிறதா என்று அறிவதற்காக இரண்டாவது பரிசோதனை ஒன்றும் தேவைப்படுகிறது.

இரண்டாவது பரிசோதனை: வைரசுப் பரிசோதனை   

இந்தப் பரிசோதனை PCR பரிசோதனை அல்லது வைரசுச் சுமைப் பரிசோதனை அல்லது RNA பரிசோதனை என்று அழைக்கப்படும். இது உடலில் உள்ள தீவிரமான ஈரல் அழற்சி C கிருமித் தொற்று பற்றிப் பரிசோதிக்கும். இப்பரிசோதனை எதிர்மறையான முடிவைக் கொடுக்குமானால் அந்த நபருக்கு ஈரல் அழற்சி C நோய் இருக்கவில்லை என்று அர்த்தம். பரிசோதனையில் நேர்முறையான முடிவு கிட்டினால் அந்த நபரிடம் வைரசுக் கிருமி உள்ளது என்றும், மற்றவர்களுக்கு அதனை அவர் பரப்ப முடியும் என்றும் அர்த்தம் ஆகும்.