ஈரல் அழற்சி C நோயின் கட்டங்கள்

கட்டம் 1: தீவிரமான தொற்று (முதல் ஆறு மாதங்கள்)

ஈரல் அழற்சி C வைரசுக் கிருமி குருதியோட்டத்தில் புகும்பொழுது அது ஈரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வைரசுக்கிருமி ஈரல் கலங்களில் தொற்றி அங்கு வளரத் தொடங்கும். மனிதர்களில் 20% அளவானோரின் உடலில் இருந்து ஒரு சில மாதங்களில் இந்த வைரசு தானாகவே அகற்றப்பட்டு விடுகிறது.

கட்டம் 2: நீண்டகாலம் நீடிக்கும் தொற்று

மனிதர்களில்  80% அளவானவர்களின் உடலில் இருந்து இந்த வைரசு தானாகவே அகற்றப்படாமல் அவர்களில் நீண்டகாலம் நீடிக்கும் ஒரு தொற்றினை உண்டாக்குகிறது.

கட்டம் 3: அழற்சி நிலை மற்றும் நாரிழையப் பெருக்கம்

வைரசுக் கிருமி ஈரல் கலங்களைக் கொன்று அதன் எண்ணிக்கையில் பெருகும் பொழுது அச் சேதத்தினால் ஈரலில் அழற்சி நிலை (inflammation) ஏற்படுகிறது. காலப் போக்கில் இச் சேதத்தினால் ஈரலில் தழும்புவடு இழையம் உருவாகிறது. இது நாரிழையப் பெருக்கம் (fibrosis) எனப்படும். இந்த வைரசுக் கிருமி மிகவும் மெதுவாகவே செயற்படும். பல சந்தர்ப்பங்களில் இதற்கு 20 - 30 வருடங்கள் எடுக்கலாம். சம்பந்தப்பட்டவர்களில் இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருக்கலாம். 

கட்டம் 4: ஈரல் கரணை (Cirrhosis)

20 - 30 வருடங்களாக நீடிக்கும் நீண்டகாலத் தொற்றின் விளைவாக ஐந்து பேரில் ஒருவருக்கு ஈரலில் அடர்த்தியான தழும்புவடு மற்றும் இறுக்கம் ஏற்படுகிறது. இது ஈரல் கரணை (cirrhosis) எனப்படும். சிலரில் இதன் பிறகும் ஈரல் சாதாரணமாகச் செயற்படுவதுடன் நோயின் அறிகுறிகள் எதுவும் தென்படாது. ஆனால் மற்றவர்களில் இந்த ஈரல் கரணையானது சாதாரண ஈரல் தொழிற்பாடுகளைப் பாதிக்க ஆரம்பிக்கும். இக்கட்டத்தில் ஈரலில் பரவலாக ஏற்படும் தழும்புவடு காரணமாக ஈரல் சுருங்கத் தொடங்குவதுடன் ஈரலின் தொழிற்பாடு நிற்கக்கூடிய ஆபத்தும் ஏற்படும். இக்கால கட்டத்தில் ஈரல் மாற்றீடு சிகிச்சை செய்வது பற்றிக் கருதலாம். ஈரல் கரணையைக் கொண்டிருப்போரில் 5% முதல் 10% அளவானோருக்கு ஈரலில் புற்றுநோய் உண்டாகும்.