ஈரல் அழற்சி C இரத்தத்துக்கும் இரத்தத்துக்குமான தொடர்பால் பரவுகிறது.

ஈரல் அழற்சி C  வைரசுக் கிருமியைக் கொண்டிருக்கும் ஒருவரின் இரத்தம் இன்னும் ஒருவரின் குருதியோட்டத்தில் கலக்கும் பொழுது இந்த நோய் பரவுகிறது. வழமையாக இது தோலில் ஏற்படும் காயங்கள் அல்லது மூக்கு, வாய் மற்றும் மலவாயில் ஆகியவற்றின் உட்புறத் தோலில் உண்டாகும் வெடிப்புகள் வழியாக ஏற்படுகின்றது. ஈரல் அழற்சி C வைரசுக் கிருமி பலம் வாய்ந்த ஒரு கிருமி என்பதால் உடலுக்கு வெளியே பலநாட்கள் அதனால் உயிர் வாழ முடிகிறது. உலர்ந்து போன இரத்தம்  கூட இந்த வைரசுக் கிருமியைப் பரப்பக் கூடியதாக இருக்கும்.

ஈரல் அழற்சி C கிருமிகள் உங்கள் உடலினுள் புகும் வழிகளில் சில பின்வருமாறு:
 

  • பாதுகாப்பற்ற மருத்துவச் செய்முறைகள்  சத்திரசிகிச்சைகள், இரத்தம் ஏற்றுதல், தடுப்பூசி மருந்து ஏற்றுதல் ஆகியவற்றுடன் கிருமி நீக்கம் செய்யப்படாத (அசுத்தமான) உபகரணங்களை மீளவும் உபயோகித்தல் போன்றன இதில் அடங்கும்.
  • கனடாவில் மேற்கொள்ளப்பட்ட இரத்தம் ஏற்றும் முறை 1992ஆம் ஆண்டுக்கு முன்பாக கூடிய ஆபத்து உள்ளதாக இருந்தது. இதற்குக் காரணம் இந்த வைரசுக்கு என்று கிரமமுறையில் செய்யப்படும் இரத்த முன்பரிசோதனை குறிப்பிட்ட அந்த வருடம் வரையில் ஆரம்பிக்கப்படவில்லை. இரத்த முன்பரிசோதனை செய்யப்படவில்லையெனில் இரத்தம் ஏற்றுதல் ஆபத்தாக அமைந்து விடும். நீங்கள் கனடாவுக்கு வருவதற்கு முன்பாக உங்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டு இருந்தால் முன்பரிசோதனை செய்யப்படாத இரத்தம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கக் கூடும்.
  • பகிர்ந்து உபயோகிக்கப்படும் ஊசிகள் மற்றும் உபகரணங்கள், மருந்துகளையும் போதைவஸ்துகளையும் தயாரிக்கும்போதும், ஊசிவழியாக ஏற்றும்போதும் அவற்றில் இரத்தம் தங்கி விடக் கூடும். மிகச்சிறிய அளவுகளில் நீங்கள் பார்க்க முடியாத விதத்தில் அவை தங்கிவிடலாம். ஒரு தடவை கூட உபகரணங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மிகவும் ஆபத்தான காரியமாக இருக்கும். கண்ணாடிக் குழாய்கள், உறிஞ்சல் குழாய்கள் அல்லது போதைவஸ்தினை மூக்கினால் உறிஞ்சி எடுக்கப் பயன்படுத்தும் நாணயத்தாள்கள் போன்றவற்றில் அவற்றை உபயோகித்தவர்களின் வெடித்த உதடுகள் அல்லது இரத்தம் கசியும் மூக்குகளில் இருந்து இரத்தம் ஒட்டிக் கொள்ளக் கூடும்.
  • பகிர்ந்து கொள்ளப்படும் பச்சை குத்துகின்ற அல்லது உடலில் துவாரம் இடுகின்ற அல்லது அக்கூப்பங்சர் ஊசிகுத்துகின்ற உபகரணங்கள்:  இவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மை, ஊசிகள் மற்றும் உபகரணங்களில் இரத்தம் தங்கி அது ஈரல் அழற்சி C கிருமியினைக் கடத்தலாம். கிருமிகொல்லப் படாத உபகரணங்களை மீளவும் உபயோகிக்கும் பொழுது இது நடைபெறும்.
  • சொந்த உபயோகத்துக்கான பொருட்கள் பகிர்ந்துகொள்ளப்படுதல் அல்லது இரவலாகப் பெற்று உபயோகிக்கப்படுதல்: சவரக் கத்திகள், பல்துலக்கும் தூரிகைகள் அல்லது நகம் வெட்டும் கருவிகள் போன்றவற்றில் இரத்தம் இருக்குமானால் அது ஈரல் அழற்சி C யினைக் கடத்தலாம். உதாரணமாகப் பொது இடங்களில் தொழில் செய்யும் சவரத் தொழிலாளர்கள் கிருமி கொல்லப்படாத சவரக் கத்திகளை மீளவும் உபயோகிக்கக் கூடும்.
  • பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளும் பொழுது இருக்கும் இரத்தம் (உதாரணமாக மாதவிடாய் காலம் அல்லது வன்மையான முறையான அல்லது மலவாயில் வழியிலான உடலுறவு) இந்த வைரசுக் கிருமியையைக் கடத்தக் கூடும்.
  • கருவுற்று இருக்கின்ற அல்லது பிள்ளைப் பேற்றுக் காலம்: இக்காலத்தின் பொழுது தாயிடமிருந்து ஒரு குழந்தைக்கு இக்கிருமியைக் கடத்தும் ஆபத்து மிகக் குறைவாகவே உள்ளது. முலைக்காம்பில் வெடிப்பு அல்லது இரத்தக் கசிவு இல்லை என்றால் முலைப்பால் கொடுக்கும் பொழுது ஈரல் அழற்சி C கிருமியை கடத்தும் ஆபத்து இருக்கமாட்டாது.