ஈரல் அழற்சி C நோய்க்கான சிகிச்சை

ஈரல் அழற்சி C (Hepatitis C) நோயினைச் சிகிச்சை மூலமாகக் குணப்படுத்த முடியும்.

ஈரல் அழற்சி C  நோய்க்கான சிகிச்சையின் குறிக்கோள்கள் இவை:

  • நோய் வைரசுக் கிருமியினை உடலில் இருந்து அகற்றுதல்
  • ஈரல் பாதிப்பினை இயன்ற அளவு குறைத்தல்
  • சம்பந்தப்பட்ட நபரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
  • ஈரல் அழற்சி C நோய் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுத்தல்

சிகிச்சை வெற்றியளிக்குமானால் இந்த நோய்க்குரிய வைரசினை இரத்தத்தில் அதன்பிறகு காணமுடியாது. அத்துடன் இந்த வைரசு மற்றவர்களுக்குப் பரவவும் மாட்டாது .

 

 மருந்துகள்

கிருமியொடுக்கிகள் (அன்ரிபயோற்றிக்ஸ்/antibiotics) போன்ற சாதாரண மருந்துவகைகள் வைரசுக்களைக் கொல்ல முடிவதில்லை. ஆனாலும் வைரசுக்கு எதிரான மருந்துவகைகளைக் (antiviral medications) கொண்டு வைரசுக்களைச் சிலவேளைகளில் சமாளித்துக் கட்டுப்படுத்த முடியும். 

ஈரல் அழற்சி C நோய்க்கான நியம முறையிலான சிகிச்சையில் பல மருந்துகளின் கூட்டு உபயோகம் அடங்கி இருக்கும். இந்த நோய்க்கு நியம முறையிலான இரண்டு மருந்துகளாகத் தற்பொழுது இருந்து வரும் பெக்-இன்ரெர்பெறோன் மற்றும் றிபாவைறின் (peg-interferon and ribavirin) ஆகியன, சில வேளைகளில் சொபோஸ்புவிர் அல்லது சிமெப்பிறவிர் (sofosbuvir or simeprevir) மருந்துகளைப் போன்ற புதிய மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப் படுகின்றன. பெக்- இனரெர்பெறோனைத் தவிர்த்து ஹார்வொனி (Harvoni) என்ற மருந்தினை அல்லது சிமெப்பிறவிர் மற்றும் சொபோஸ்புவிர் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாகவும் பிற மருந்துகளாகப் பயன்படுத்துவதும் உண்டு. ஹொல்கிறா பாக் (Holkira Pak) என்ற இன்னுமொரு மருந்தும் சில வேளைகளில் றிபாவைறின் மருந்துடன் சேர்த்து உபயோகிக்கப் படுவது உண்டு. இவ்வாறான புதிய மருந்து வகைகள் நேரடியாகச் செயற்படும் வைரசுக்கு எதிரான மருந்துவகைகள் (direct-acting antivirals) என அழைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட உடலில் ஈரல் அழற்சி C வைரசு தன்னைத் தானே பிரதியாக்கம் செய்வதை இப்புதிய மருந்துகளால் தடுக்க முடிகிறது.

இப்புதிய மருந்துகளின் துணைகொண்டு நடைபெறும் சிகிச்சையானது பெரும்பாலும் 3 மாதங்கள் வரை நீடிக்கிறது. சில நோயாளிகளில் சிகிச்சை ஆறு மாதங்கள் வரையிலும் நீடிக்கலாம்.

ஈரல் அழற்சி C நோய்க்குரிய பெக்-இன்ரெர்பெறோன் அல்லது றிபாவைறின் போன்ற சில மருந்து வகைகள் பல பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். எனினும், இவ்விளைவுகளைச் சமாளித்துக் கட்டுப்படுத்துவது சாத்தியமாக உள்ளது. புதிதாக வந்துள்ள ஈரல் அழற்சி C நோய் சிகிச்சைக்கான மருந்துவகைகளுக்குப் பக்க விளைவுகள் மிகக்குறைவாகவே உள்ளன. இப்பக்க விளைவுகளின் தாக்கமும் இலேசாகவே இருக்கும்.

இப்புதிய மருந்துகளில் சிலவற்றை மாகாண மற்றும் பிரதேச வாரியாகப் பின்பற்றப்படும் மருந்துவகை விபரநூற் தொகுதிகள் (formularies) வழியாகப் பெறமுடிகிறது. இவ்வாறான மருந்துகளை ஒருவர் பெறுவதற்கு அவருக்குக் குறித்த சில தகைமை வரையறைகள் இருத்தல் அவசியம் ஆகும். உதாரணமாக, அவருக்கு ஈரல் பாதிப்பு குறித்த ஒரு மட்டத்திற்கு உயர்ந்து இருப்பது, அல்லது குறித்த ஒரு ஈரல் அழற்சி C நோய் வைரசுத் திரிபு (strain)அவரிடம் காணப்படுவது அவசியம்.  இப்புதிய மருந்துகளில் பல, நேரடியாகச் செயற்படும் வைரசுக்கு எதிரான மருந்து வகைகளாக உள்ளன. சிகிச்சை முறையில் பெக்-இன்ரெர்பெறோன் மற்றும் றிபாவைறின் ஆகிய இரண்டின் இடத்தையும் இப்புதிய மருந்துகளில் சில நிரப்பும் என்று கருதப்படுகிறது.

 

சிகிச்சைக்குத் தயாராகுதல்

சிகிச்சை முறையினால் ஒருவர் குணமாவது பலவகையான காரணிகளில் தங்கி உள்ளது. இக்காரணிகளில் அடங்குவன:

  • சம்பத்தப்பட்ட நபரிடம் உள்ள ஈரல் அழற்சி C நோய் வைரசுத் திரிபு
  • அவருக்கு ஏற்பட்டுள்ள ஈரல் பாதிப்பின் அளவு
  • குறித்த நபர் எந்த அளவுக்குத் தனது மருந்துகளைத் தவறாது கிரமமாக எடுக்க   எடுக்கின்றார்.
  • உடலின் நிறை
  • மதுபானம் உட் கொள்ளுதல்
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு. 

சிகிச்சையினை ஆரம்பிப்பதற்கு முன்பாக, நீங்கள் உங்களுடைய ஆரோக்கிய பராமரிப்புப் பணியாளர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருடன் சேர்ந்து சிகிச்சைக்கான திட்டத்தினை வரைதல் முக்கியம் ஆகும். வைத்தியர்கள் எப்பொழுதும் சிகிச்சையினை ஆரம்பிக்க முன்பாகவும், சிகிச்சையின் பொழுதும், சிகிச்சை முடிந்து மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரைக்கும் நோயாளியின் நிலையினைக் கணித்துக் கொள்ளுவர். வைத்தியர்கள் நோயாளியின் ஈரல் ஆரோக்கிய நிலையினையும் அவரது உடம்பில் உள்ள வைரசுக்களின் அளவினையும் தொடர்ந்து பார்த்து அவதானித்து வருவர். ஒருவரில் ஈரல் பாதிப்பு மிகவும் அதிகமாக ஏற்பட்டு இருக்குமாயின், அவரது நோய் நிலை குணமான பின்னரும் வைத்தியர் அவரது ஈரல் ஆரோக்கிய நிலையினைத் தொடர்ந்து கண்காணித்து வரவும் கூடும். ஈரலில் புற்றுநோய் ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்காக அவர் இவ்வாறு செய்வார். 

சிகிச்சைக்கு உள்ளாகும் ஒருவர் சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகள், சிகிச்சையின் பொழுது வேலைக்குப் போகாமல் இருக்க நேரிடும் நாட்கள், இக்கால கட்டத்தில் அவர்கள் சமாளிக்க வேண்டிய வேறு நோய் நிலைமைகள் ஆகியவற்றுடன் சிகிச்சைக்கான செலவினையும் கருத்தில் கொள்ளுதல் அவசியம்.

இந் நோய்க்கான சிகிச்சைக்குரிய செலவு அதிகமாக இருப்பதால் சிசிச்சை பெற்று கொள்ளுவது பாதிக்கப்படலாம். இதற்கான செலவினை ஈடுகட்ட உதவும் உதவித் திட்டங்களும் உள்ளன. புது முறையிலான சிசிச்சைகளுக்கு உரிய செலவினை இப்பொழுது பல மாகாணங்களும் பிரதேச அரசுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளன. ஒரு நோயாளியின் ஆரோக்கிய பராமரிப்புப் பணியாளர் நோயாளியின் பகுதியில் கிடைக்கும் சிகிச்சைக்கான செலவு நிதியுதவி ஏற்பாடுகளை நோயாளிக்கு விளக்கிக் கூற முடியும். நிதியுதவிக்கான திட்டங்களைக் கண்டறிவதற்கும் அவர் உதவலாம் .

நோய் வாய்ப்பட்ட ஒரு நபருக்கு நண்பர்களும் குடும்பத்தினரும்  உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆதரவு கொடுக்க முடியும். சிகிச்சையை ஆரம்பிப்பது  ஒரு நபர் தனது வைத்தியருடனும் தனக்கு ஆதரவு வழங்குவோருடனும் சேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய முடிவாகும் .

சிகிச்சை செய்வதனால் சம்பந்தப்பட்ட வைரசுக் கிருமிக்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தி ஏற்படப் போவதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவது முக்கியம் ஆகும். எனவே ஒரு நபருக்குச் சிகிச்சையின் பின்பும் சம்பந்தப்பட்ட வைரசுத் தொற்று திரும்பவும் ஏற்படலாம்.

சிகிச்சை மூலம் ஒரு நபரின் ஈரலையும் அவரது உயிரினையும் காப்பாற்ற முடியும்.